சான்றிதழ் பெறும் நாளிலேயே, பள்ளியில் வேலைவாய்ப்புக்கு பதியலாம்!



பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சான்றிதழ் பெறும் அன்றே, தங்கள் கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பக இணையதளம் மூலம், பள்ளியிலேயே பதிவு செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், எட்டு லட்சத்து 23 ஆயிரத்து 208 மாணவ,
மாணவியர் தேர்வு எழுதினர். இதில், ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 464 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள், தங்கள் மதிப்பெண் சான்று பெறும் நாளிலேயே, அவர்களது கல்வித் தகுதியை, தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுசெய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கல்வித்துறை மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, இணைந்து மேற்கொண்டுள்ளன.
குடும்ப அட்டை, ஜாதிச் சான்று: மதிப்பெண் சான்றிதழைப் பெற, பள்ளிக்குச் செல்லும் போது, தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஜாதிச் சான்றிதழை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை, உறுதி செய்துகொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை, ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும், உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
தற்போது புதிதாக பதிவுசெய்ய விரும்புவோருக்கு, புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை, உடனுக்குடன் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளாக இருப்பின், தங்கள் கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின், தங்கள் முன்னுரிமையை, வேறு ஒரு வேலை நாளில், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு, நேரில் சென்று, பதிவு செய்து கொள்ள வேண்டும்.
15 நாளுக்குள் பதிவு: பிளஸ் 2 மதிப்பெண் சான்று, மே 30ம் தேதி பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்படுகிறது. மே 30 முதல் ஜூன் 13ம் தேதி வரை, 15 நாட்களுக்குள், அந்தந்த பள்ளிகளிலேயே, மாணவ, மாணவியர் பதிவு செய்து, வேலை வாய்ப்பு அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 தகுதிக்கு, நாளை தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.
கடந்த காலங்களில், தேர்வு முடிவு வெளியானதை ஒட்டி, ஒரே நாளில், பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் கால விரயம் மற்றும் போக்குவரத்து செலவை முற்றிலும் தவிர்ப்பதற்காக, பள்ளிகள் வாயிலாகவே, இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள, இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை, பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.